நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறையும் வகையிலான எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் அதிகார ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுதந்திர தினத்தில் கூறினார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை செய்தனர். நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே மக்கள் இந்த மாற்றத்தை செய்தனர். நாட்டு மக்கள் மந்த புத்தி உள்ளவர்கள் இல்லை புத்திசாலிகள்.
நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதும் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறைய வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரம் கூட வேண்டும் என ஜனாதிபதி நினைக்கின்றார். எனினும் அதற்கு இடமளிக்க முடியாது.
நாடாளுமன்றத்தை வலுப்படுத்துவது என்பது மக்களை வலுப்படுத்துவது. சர்வாதிகாரியிடம் இருக்கும் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளது.
இதுவே 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் செய்த பெரிய காரியம். இதனை மாற்றுவது என்பது கடந்த காலத்தில் இருந்தது போன்ற சர்வாதிகாரத்தை பெறும் முயற்சி எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.