தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் மீண்டுமொரு இனவாத் பிரச்சினையை தூண்டிவிடுவதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய கீதத்தை சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதிக்கப்படாமை குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிடுகின்ற குற்றச்சாட்டுக்களை பெரிதான அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 04ம் திகதி கொண்டாட்டப்பட்ட இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதத்தைபாடுவதற்கு அனுமதிக்காத படியினால் சுதந்திர தின வைபவத்தை பகிஷ்கரித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே கூறியதுபோல சுதந்திர தினத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதைத் தவிர்த்துக்கொண்ட இலங்கை அரசாங்கம், சிங்கள மொழியில் மாத்திரதே தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதித்திருந்தது.
இந்நிலையில் கண்டியில் இன்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
அதேபோல கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதிகளாகவே செயற்படுவதாகவும் விமர்சனம் வெளியிட்டார்.
“தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இருந்து முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டை நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறி அவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இந்த நாட்டு மக்களும் அதேபோல தமிழ் மக்களுங்கூட ஏற்கமாட்டார்கள். அதனால் அவர்களால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களானது செல்லுபடியற்றதாகவே இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.
அதேபோல இந்த நாட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பரங்கியர் உள்ளிட்ட மக்களுக்கு சமவுரிமையைப் பற்றி பேசுவதாயின் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அது பிழையாகும்.
இந்தியாவில் பல மொழிகளும், இனத்தவர்களும் வாழ்ந்துவருகின்ற போதிலும் ஒரே மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகின்றது. அதனால் விசேடமாக சம்பந்தனும், சுமந்திரன் குழுவினரும் இனவாதத்தை தூண்டுவதற்காக ஏதேதையோ பிடித்துக்கொள்கின்றனர்.
தொடர்ச்சியாக அவர்கள் இனவாதத்தை தூண்டிவிடுவதையே செய்கிறார்கள். 2006ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதிகளாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.
அவர்களே இன்றும் செயற்படுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் இன்று அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்படுவதோடு இந்த நாட்டை அழிப்பதற்கே முயற்சிக்கின்றனர்” என்றார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியில் சம அந்தஸ்து கொண்ட தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு கோரிவருகின்றது.
எனினும் இந்தக் கோரிக்கைக்கு பொதுஜன முன்னணியிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சம அந்தஸ்து கொண்ட தலைவர் பதவி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படாது என்பதை உறுதிபடக் குறிப்பிட்டார்.
நாட்டின் ஆட்சியை ஏற்கின்றபோது மீண்டும் ஒருமுறை அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், 04 வருடங்களே பதவியில் இருப்பதாகவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆகவே மீண்டும் அவர் பதவிகோரமாட்டார் என நினைப்பதோடு அவர் குறித்த சம அந்தஸ்து தலைவர் பதவி குறித்த கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டவை என்றே எண்ணுகிறேன். ஆட்சிமுடிந்த பின்னர் வீடு செய்வதாகவே அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சம அந்தஸ்து அல்ல அந்தஸ்து உடைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மாத்திரமே.
அவருக்கு ஒத்துழைக்கின்ற ஒருவரே ஒருகாலத்தில் இந்நாட்டுத் தலைவராக முடியும். சின்னம் குறித்தும் இப்பேர்து பிரச்சினை இல்லை.
58 இலட்சம் வாக்குகள் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் 69 இலட்ச வாக்குகள் ஜனாதிபதி தேர்தலிலும் கிடைத்திருக்கின்ற நிலையில் இன்னும் என்ன இதில் பிரச்சினை உள்ளது?
ஆகவே மொட்டுச் சின்னமே இந்த நாட்டின் வெற்றிச்சின்னமாகும்” என்று பதிலளித்தார்.