பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஷரியத் சட்டத்தின் படி 14 வயது சிறுமி, அவருக்கு அது முதல் மாதவிடாய் சுழற்சியாக இருந்தாலும் திருமணம் செய்து கொண்டால் அது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெற்றோரை கலங்க வைத்துள்ளது.
சிந்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி தம்பதி. இவர்களின் மகள் ஹுமா யூனுஸ்(14).
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் கிறிஸ்தவரான ஹுமாவை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிந்து மாநில உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கைக் கடந்த 3 ஆம் திகதி விசாரித்த நீதிபதிகள் இக்பால் கல்ஹூரோ, இர்சத் அலி ஆகியோர் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்பட்டி இந்த திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறித் தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தபாசும் யூசுப் கூறுகையில்,
இந்த திருமணம் கடந்த 2014 ஆம் ஆண்டு சிந்து மாநில குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறது.
18வயதுக்கு உட்பட்ட இந்து, கிறிஸ்தவ பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், அந்த சிறுமிக்கு முதல் மாதவிடாய் சுழற்ச்சி வந்திருந்தாலும் அந்த திருமணம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சிறுமியின் வயதை ஆய்வு செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொலிஸாரோ அப்துல் ஜப்பாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.
மேலும், சிறுமியின் வயதை உறுதி செய்யும்வரை சிறுமியை கணவருடன் சேர்க்கக் கூடாது எனக் கோரியுள்ளோம்.
ஆனால், பொலிசார் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துவிடுவார்கள் என சிறுமியின் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
இருப்பினும் சிறுமியின் பெற்றோர் தேவாலயம், பாடசாலை ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வயது குறித்த சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அவர் 2005 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தவர் என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.