ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒப்புதல் நாளை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயற்குழு கூட்டத்தில் வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் அவர் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்குவது குறித்து கட்சி முடிவெடுக்கும்.
அத்துடன் கட்சியின் நாடாளுமன்றக்குழு ஏற்கனவே முன்னணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை தெரிவு செய்துள்ளமையால் அவருக்கான ஒப்புதலும் நாளை வழங்கப்படும்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணிக்கு அப்பால் புதிய முன்னணி ஒன்றை அமைக்கும் பணிகளில் சஜித் பிரேமதாச தரப்பு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக மூன்று வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை அந்த தரப்பு இரகசியமாக பேணி வருகிறது.
எனினும் இந்த புதிய முன்னணியை சஜித் தரப்பு அமைக்குமானால் அதனால் நன்மையும் உண்டு. அதேபோன்று தீமையும் உண்டு.
நன்மை என்று பார்க்கின்றபோது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிலை யாருக்காவது தரப்படாது போனால் இந்த புதிய முன்னணியின் ஊடாக வேட்பாளர் நிலையை வழங்க முடியும். (குறிப்பாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா போன்றவர்கள்)
மறுபுறத்தில் புதிய முன்னணியில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்களை சஜித் பிரேமதாசவினால் திசை திருப்புவது இலேசான விடயமல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே சஜித் தரப்பு இந்தவிடயத்தை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.