இலங்கையில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் அடிப்படையில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க பிரதி உதவி ராஜாங்கச் செயலாளர் ஜொனதன் ஹெனிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய வலயத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், இது விரைவில் நீங்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் அமெரிக்கா மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்த அவர், ஆசியாவின் பழமையான ஜனநாயகத்தைக் கொண்ட இலங்கை, அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுடன் கரையோரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இணைந்து செயற்பட்டு வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.