கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அந்த வியாதியால் ஏற்படும் மரண எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எபோலா நோயை கண்டறிந்த விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் மொத்த பிராந்தியங்களையும் முற்றாக ஸ்தம்பிக்க வைத்துள்ள கொடிய கொரோனா வியாதி தொடர்பில் தொடர்ந்து கண்காணித்துவரும் நிபுணர்களில் ஒருவரான பீட்டர் பியோட்,
எபோலா வியாதியைவிடவும் கொரோனா மிக மோசமானது எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அளவுக்கு கொரோனா வியாதியால் ஏற்படும் மரண எண்ணிக்கையும் அதிகரிக்கும் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதே அதற்கு காரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா பரவும் முறை காரணமாக உண்மையில் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் என கூறும் பியோட், கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம், மிக அதிகம் என எச்சரிக்கிறார்.
மேலும் இதுவரை தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட அடிப்படை மருந்துகளுக்கு சீனாவில் கடுமையான தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
இதே நிலை பல நாடுகளுக்கும் மிக விரைவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003 காலகட்டத்தில் ஏற்பட்ட சார்ஸ் வியாதி காரணமாக மரணமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் தாண்டியுள்ளதாக கூறும் அவர்,
கடுமையான கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்கிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவில் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,656 அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



















