அமெரிக்காவில் குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்து தாயாருடன் பிஞ்சு குழந்தை உள்ளிட்ட 6 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் கிளின்டன் நகரிலேயே சனிக்கிழமை குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாடசாலை ஆசிரியரான 33 வயது பெண்மணி தமது கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அந்த ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டில் திடீரென தீப்பிடித்தது.
கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஆசிரியரும், அவரது 6 குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த பெண்மணியின் கணவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அவசர உதவிக் குழுக்களால் அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.
குடியிருப்பில் எப்படி தீப்பிடித்தது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவில்லை என்றாலும், இது சதிச்செயலாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



















