“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும்.
இதையே இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம்.
அத்துடன், இந்தியாவின் விருப்பத்தை ராஜபக்ச அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் .
“இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்கனவே புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமும் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய கூறி வருகின்றார்.
மீண்டும் இந்தியா தனது நிலைப்பாட்டை கோட்டாபயவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமும் எடுத்துரைத்துள்ளது.
எனவே, இந்த நிலைப்பாட்டை ராஜபக்ச அரசு உதாசீனம் செய்ய முடியாது” எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
‘இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்பட வேண்டும்.
இதுவே இந்தியாவின் நிலைப்பாடு. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம்’ என்று புதுடில்லி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.