திருக்கோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட வில்கம் முல் வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை – வவுனியா பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் இன்று முன்னெடுக்கபட்டுள்ளது.
திருக்கோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட வில்கம் முல் வித்தியாலயத்தில் 7 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக பல தடவைகள் கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையென தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் ஆண்டு தொடக்கம் ஒன்பதாம் ஆண்டு வரை மாணவர்கள் கல்வியை தொடர்கின்ற போதிலும் அப்பாடசாலையில் நிலவுகின்ற வெற்றிடங்கள் குறித்து எவ்வித முன்னேற்றங்களும் இல்லை எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்கும் வரை தாங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை கல்வி வலயம் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தராவிட்டால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.