வடக்கு, கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக்காலகட்டத்தில், வடக்கில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பது வருத்தத்திற்குரியது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘இன்று நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனத்துவம் தலை விரித்து ஆடுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் அதனை நமக்கு கோடிட்டு காட்டியுள்ளன. இவ்வாறான நிலையில், தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இந்நிலையில் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளார். இது வடக்கில் தமிழ் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தும்.
தற்போது வடக்கு, கிழக்கில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை உள்ளது. இந்நிலையில், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதற்கான கால அவகாசமும் உண்டு. தமிழர்களின் ஒற்றுமை ஓங்கி நிற்க வேண்டும்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் மொட்டு கட்சியில் வாக்கு கேட்கப் போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடனே தேர்தலில் போட்டியிடுவோம் என மேலும் தெரிவித்தார்.