இஸ்லாமிய பெண்ணொருவர் புர்கா அணிந்தமைக்கு நபர் ஒருவர் எதிர்ப்பு வெளியிட்ட காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் காணொளி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காணொளி தொடர்பில் இனவாத ரீதியான கோபங்களை வெளிப்படுத்தும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இது குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் பலர் புர்காவை தொடர்புபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை பகிர்வதாக சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி அரசியல் லாபம் தேட சில தரப்பினர் முயன்று வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறும், பேஸ்புக் பதிவுகளை தங்கள் சங்கத்தினால் ஆராய முடியும் என்பதனால் அவதானமாக இருக்குமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வத்தளையிலுள்ள சுப்பர் மார்கட்டில் புர்கா அணிந்து வந்த பெண்ணுடன் இத்தாலியில் இருந்து வந்த நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.