முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று முன்தினம் திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் காணிகள் சிலவற்றை மோசடியான முறையில் உறுதிகளை தயாரித்து விற்பனை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது சகோதரன் மீது மேற்கொள்ளப்படும் தொடர் விசாரணைகளின் நிமிர்த்தமே மேற்படி திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சோதனைகளின்போது தமிழ் மக்களுடையது என சந்தேகிக்கப்படும் மோசடி உறுதிகளின் பிரதிகள் 227 ம் மூலப் பிரதிகள் 8 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி உறுதிகள் யாவும் றிசார்ட் பதுயூதீனின் நெருங்கிய சகாக்களின் பெயரில் காணப்படுவதாக அறியமுடிகின்றது.
தனக்குள்ள அரசியல் பலத்தை பயன்படுத்தி மோசடி செய்து நெருங்கியவர்களின் பெயர்களில் காணிகளை பதிவு செய்துகொண்டு பின்னர் அதனை விற்று பணமாக்கி கொள்வதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் சதொச ஊடாக மேற்கொள்ளப்பட்ட அரசி இறக்குமதியில் கோடிக்கணக்கான ரூபா ஊழல் இடம்பெற்றிப்பதும் அந்த கோப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 200KW மின்பிறப்பாக்கி இறக்குமதியிலும் ஊழல் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.200KW என்ற பெயரில் 150KW மின்பிறப்பாக்கி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை அம்பலாமாகியுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெவ்வேறு நபர்களின் பெயர்களில் பதியப்பட்ட காணி உறுதிகள் பலவும் அந்த ஆவணங்களுடன் காணப்பட்டன என்று பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
சதொசவில் வைத்திருக்க வேண்டிய மேற்படி கோப்புகளை ஏன் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை புலனாய்வுதுறையினர் எழுப்புகின்றனர்.
புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அக்கொள்வனவுகளுடாக றிசார்ட் கோடிக்கணக்கான அரச பணத்தினை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியுள்ளமை யாவரும் அறிந்தவிடயமாகும்.
இதேநேரம் அவர் தனது அமெரிக்காவிலுள்ள இரகசிய வங்கிக்கணக்கொன்றுக்கு லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2018 ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்கப்பட்டிருந்த நேரத்தில் 1 லட்சம் அமெரிக்க டொலர்களை குறித்த வங்கிக்கணக்கு றிசார்ட் மாற்றியுள்ளார்.
குறித்த மாற்றுதல் இடம்பெற்று ஓரிரு நாட்களில் மேலுமொரு பெருந்தொகையை மாற்ற முற்பட்டபோது, சந்தேகமடைந்த எப்.பி.ஐ யினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.