எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர்களை கட்சியில் இருந்து நீக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய சக்தி கட்சியை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளமை மற்றும் அந்த கட்சியில் பதவிகளை வகிப்பதை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய தேசிய சக்தி கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.
எமது தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய சக்தியை உருவாக்க சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதயம் சின்னத்தின் கீழ் புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அதனை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவையும் தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரின் பெயர்களை அங்கீகரித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.