முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் புதிதாக வைத்தியசாலை கட்டுவதற்காக மிதிவெடி அகற்றப்படும் காணியில் இருந்து இவ்வாறு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் புனா்வாழ்வு வைத்தியசாலை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் வெடிபொருட்கள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில், மனிதநேய கண்ணிவெடியகற்றும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அந்த பகுதியில் வெடிபொருட்கள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது இன்று காலை மனித எலும்பு கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதுடன் அந்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு எலும்புக்கூட்டு எச்சங்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சிதைவடைந்த நிலையில் ஒரு மனிதனுடைய முழு எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.