“பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கையின் சர்வதேச கடன்களை மீளச் செலுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த வேண்டுகோளால் எமது நாட்டுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தன்னுடன் மேலும் பலரை அழைத்துச் சென்றிருந்தார். இந்தியாவுக்குச் சென்று யாத்திரைகளிலும் அவர் ஈடுபட்டார்.
மஹிந்தவின் இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இவ்வாறான விஜயம் அவசியமானதா?
இதேவேளை, இலங்கையின் சர்வதேச கடன்களை செலுத்துவதற்காக தமக்கு உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கவே மஹிந்த அங்கு சென்றிருந்தார். இது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எமது வீட்டிலுள்ள பிரச்சினைகளை அயல் வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தைக் கொண்டுள்ள எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், மஹிந்தவின் செயற்பாட்டால் நாட்டுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது” – என்றார்.