பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வரும் நிலையில், லண்டனில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி பலரின் உயிரை வாங்கிய கொரோனா வைரஸால் உலகநாடுகள் அச்சத்தில் உள்ளன. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியாமல் சீனா திணறி வருகிறது.
சீனா மட்டுமின்றில் உலகில் 24 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறப்பட்டது. இதில் பிரித்தானியாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி இதை உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போது இங்கிலாந்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதன் மூலம் பிரித்தானியாவில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று சீனாவில் இருந்து அவருக்கு பரவியுள்ளது. தற்போது இவர் லண்டனில் இருக்கும் Guy’s and St Thomas மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவல் தலைநகரில் இருக்கும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நபருடன், யார் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதை அதிகாரிகள் விசாரணை செய்வார்கள், அப்போது அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்ற சோதனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.