நாடாளுமன்றம் மூடப்படுமானால் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்தவரை மதிக்க தெரியாமல் இருந்தால், மக்களின் பிரச்சினைகளை தெரிந்துக்கொள்ளாமல் இருந்தால் நாடாளுமன்றம் அவசியம் இல்லை.
எனவே அதனை 2 அல்லது 3 வருடங்களுக்கு மூடி வைப்பதில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹொரனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இன்று நாள் ஒன்றுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளும் இடமாக நாடாளுமன்றம் உள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமானால் நாள் ஒன்றுக்கு 9.2 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
அமர்வு நடக்காதபோதும் நாள் ஒன்றுக்கு 8.7 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. நாடாளுமன்றத்துக்குள் யாரும் யாரையும் மதிப்பதில்லை.
நாடாளுமன்றத்துக்குள் மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் கத்தி கொண்டு வந்தமை போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் 9.2 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதில் பயன் இல்லை.
அந்த பணத்தை கல்விக்காக செலவிடலாம். எனவே நாடு முன்னேற வேண்டுமானால் அனைவரின் மனங்களிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்று விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.