தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ எமது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்காது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ரெலோவின் 50ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
எமது தலைவர்களது தியாகம் மக்களது விடுதலை என்ற இலட்சிய நோக்கத்தோடு இருந்தது. அரசாங்கத்தை அரவணைத்து போகும் சிந்தனையில் அவர்கள் இருக்கவில்லை.
இன்று எமது கட்சி வலுவாக இருக்கிறதென்றால் அவர்கள் அன்று இட்ட அத்திவாரமே காரணம். விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த கூடாதென்று கருதிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம் என்பதை இங்கு கூறுகிறேன்.
சகோதர படுகொலைகளின் பின்பு நாங்கள் (ரெலோ) இல்லை என்று பலர் கருதினார்கள். நாம் மீண்டும் வந்து புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை இங்கு நினைவு கூருகிறேன்.
விடுதலைப் புலிகள் எதாவது தாக்குதல் நடத்தினால் அடுத்த அடி இங்கு இருக்கும் எமது முகாம்களிற்கு தான் என்று அனைவருக்கும் தெரியும்.
இன்று ஊனமுற்று, இடுப்பு இயங்காமல் இராணுவத்தால் ஒடுக்கப்பட்டவர்களாக எங்களுடைய போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எமது இயக்கத்தின் செயற்பாடு தொடர்ந்து வந்த அரசாங்களிற்கு எதிராகவே இருந்தது. அன்று மகிந்த அரசாங்கம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவுகளை பணய கைதிகளாக வைத்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கவில்லை.
எதிர்த்து வாக்களித்தார்கள் அதுதான் கூட்டமைப்பு. இன்றும் மக்களின் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணம். கூட்டமைப்பை உருவாக்கியதிலே எமது பங்கு கூடுதலாக இருந்தது.
கிழக்கில் சிவராம் மற்றும் பத்திரிகையாளர்கள் அந்த முயற்சியை எடுத்த போது கூடுதலாக நான் அவர்களோடு இருந்தவன்.
விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு கூட்டமைப்பு உருவாகிய பின்பு அது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக செயற்பட்ட வரலாற்றையும் இங்கு கூற வேண்டும்.
இன்று கூட்டமைப்பை திட்டிதீர்பவர்கள் புதிதாக முளைத்தவர்கள். எங்களோடு இருந்து போன அவர்கள் இன்று எள்ளிநகையாடுகின்றனர்.
நாம் அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. இனப்பிரச்சினை தீர்வுக்காக பலவிட்டுக் கொடுப்புகளை செய்தோம். நாம் அடிவருடிகாளக அரசாங்கத்துடன் என்றும் செயற்படவில்லை.
புதிய ஜனாதிபதி சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாக பெருமை பேசுகிறார். ஒரு தேசிய இனம் கொழும்பிலே நிர்ணயிக்க கூடிய சக்தியாக இருக்க கூடாது என்று சிங்கள மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டாரகள்.
நாம் இனவாதிகள் அல்ல என்ற நோக்கத்தோடு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவருக்கு வாக்களித்தோம். எமது நல்ல சமிஞ்சையை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி தயாரில்லை.
அதன் பிண்ணணியே வடக்கு, கிழக்கில் உள்ள சோதனை சாவடிகள். இந்த சோதனை சாவடிகளை நிறுத்த முடியாத முதுகெலும்பில்லாதவர்களாக சில தமிழர்கள் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் எங்களது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்காது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்கா திருப்பி அனுப்புகின்றமை எமக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி. இது ஆரம்பம்.
எமது இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுதருவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கிறது.
அதற்காக எமது இயக்கம் மற்றும் கூட்டமைப்பு எந்த விலையையும் கொடுக்க தாயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.