இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் இந்த கருத்தை இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவரத்தனவை சந்தித்தபோது கூறியுள்ளார்.
இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க கடந்த 14ஆம் திகதியன்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தடைவிதித்தது.
இதனையடுத்து தமது எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை அரசாங்கம் இன்று தமது எதிர்ப்பை ராஜதந்திர ரீதியில் தெரிவிப்பதற்காக அமெரிக்க தூதுவரை வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அழைத்திருந்தது.
இதன்போது, போர்குற்ற விசாரணைகள் குற்றவியல் விசாரணைகளாக இருக்கமாட்டாது என்ற விடயத்தை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரை வெளிநாடு ஒன்று தடை செய்வது என்பது அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடை அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் தேவையற்ற பிணக்குகளை உருவாக்கும் என்றும் தினேஸ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அமெரிக்கா தூதர் டெப்லிட்ஸ் இலங்கையின் கருத்தை வோசிங்டன் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளதுடன், இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.