இந்தியாவில் தன்னை விட 32 வயது அதிகமான பெண்ணை மணந்த நபரிடம் அப்பெண் பல லட்சங்கள் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பஸ்தாரியா (77). பெரும் பணக்காரரான இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரியா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார்.
அதன்படி ஆஷா (45) என்ற பெண் பஸ்தாரியாவை மணக்க முன் வந்தார். இதன்பின்னர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் ஆஷிஷ், ராகுல் என்ற இருவர் ஆஷாவுடன் வந்து தங்கினார்கள். இருவரும் தன்னுடைய சகோதரர்கள் என கணவர் பஸ்தாரியாவிடம் ஆஷா கூறினார். இந்நிலையில் தன் பெயரில் பல ஏக்கர்கள் நிலம் இருப்பதாகவும் அதை துபாயில் உள்ள உறவினர்களிடம் விற்று பணத்தை உங்களிடம் தரவிரும்புகிறேன் எனவும் கணவரிடம் ஆஷா கூறினார்.
ஆனால் அது தொடர்பான ஆவணங்களை சரி செய்து கைக்கு வர செய்ய ரூ 15 லட்சம் செலவாகும் என கூறி கணவரிடம் அந்த பணத்தை கேட்டு வாங்கி கொண்டார் ஆஷா.
பின்னர் தொடர்ந்து சில லட்சங்களை கணவரிடம் வாங்கிய ஆஷா மொத்தமாக ரூ 40 லட்சத்தை வாங்கியதோடு அவரின் நகைகள், காரையும் வாங்கி கொண்டார்.
இந்த சூழலில் கடந்த இரு மாதங்களாக ஆஷா திடீரென மாயமானார்.
அவரை பல இடங்களிலும் தேடிய பஸ்தாரியா இறுதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரே இந்த விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொலிசார் விசாரணையில் ஆஷா இதே போல வயதானவர்கள் 10 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றி தப்பித்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மோசடி பெண் ஆஷாவை தேடி வருகின்றனர்.