ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கி முன்வைத்த 30/1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என எல்லே குணவங்ச தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறாமலேயே இலங்கை அரசாங்கம், ஐக்கிய மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது. நாம் அறிந்த வரை அந்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை.
அந்த யோசனையானது மிக தெளிவாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதுடன் இலங்கையின் இறையாண்மையை மீறியது.
அத்துடன் யோசனை இலங்கை சட்டத்துறை, நீதித்துறையில் தலையிடும் நடவடிக்கை என்பதுடன் இலங்கை மீது சட்டத்தை திணிப்பதாகும்.
மேலும் இந்த யோசனை நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தை தரம் தாழ்த்தியுள்ளதுடன் அதன் அதிகாரங்கள் சர்வதேசம் கையாளும் வகையில் அமைந்துள்ளன.
ஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியமைக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலேயே அவர்கள் ஜனாதிபதியை தெரிவு செய்தனர்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யாததன் மூலம் ஜெனிவா யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.
தேசிய அமைப்புகளின் முன்னோடிகள் மற்றும் இனப்பற்றாளர்களின் கூட்டு என்ற வகையில், நாடாளுமன்றம் அனுமதி வழங்காது, மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் யோனைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகி, மனித உரிமை பேரவையில் அதற்கு எதிர்ப்பை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என எல்லே குணவங்ச தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


















