இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா நாட்டுக்குள் வர தடைவிதித்துள்ள நிலைமையில், தற்போதைய அரசாங்கம் முன்னர் கூறியது போல், அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறிய சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அரசாங்கம் எம்.சீ.சீ. உடனபடிக்கையை முற்றாக எதிர்க்கின்றது. அந்த உடன்படிக்கையை கிழித்தெறிய போவதாக விமல் வீரவங்ச கூறியது எனக்கு நினைவில் உள்ளது. அதனை கிழித்து காட்டினார் என நினைக்கின்றேன்.
இதுதான் நல்ல சந்தர்ப்பம். நாட்டுக்கு கெடுதியான எம்.சீ.சீ உடன்படிக்கையை அரசாங்கத்தில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு இருப்பதில் பயனில்லை. அமெரிக்காவின் பிரதிநிதிகள் இருக்கின்றனர் எம்.சீ.சீ உடன்படிக்கை எமக்கு தேவையில்லை என நேரடியாக கூறுங்கள். எமது இராணுவ தளபதிக்கு இப்படியான அச்சுறுத்தலை செய்துள்ளதால், நாங்கள் உடன்படிக்கையை கிழித்தெறிகிறோம் என்று கூறுங்கள் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.