“ஐ,நா. மனித உரிமைகள் சபையில் 47 நாடுகளால் இலங்கை தொடர்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் அரசு விலக எடுத்திருக்கும் முடிவால் சர்வதேசத்தை நாட்டு மக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இலங்கை தொடர்பான ஐ.நாவின் 30/01 மற்றும் 40/01 ஆகிய தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு, தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற பரிந்துரைகளை இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து விலகுகின்றது. அரசின் இந்த முடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
எனினும், அரசின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில், அரசின் இந்த அறிவிப்பால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப் போகின்றன. நாட்டு மக்கள் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளும் நிலையை அரசு ஏற்படுத்துகின்றது.
இந்த அரசு புறந்தள்ளுகின்ற தீர்மானங்களானது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டவையாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இங்கை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.
சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும்” – என்றார்.