பல ஆண்டுகளாகவே அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது. உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அந்த நாட்டுடன் இணைந்து தொழில் செய்வது அமெரிக்காவுக்கு மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் வருகின்ற 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் செல்கின்றனர். அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,
இந்தியாவுக்கு அடுத்தவாரம் செல்கிறேன். பல ஆண்டுகளாகவே அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது. உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அந்த நாட்டுடன் இணைந்து தொழில் செய்வது அமெரிக்காவுக்கு மிகவும் கடினம்.
பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த தகவல்களின்படி,
“நமது மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை வழங்கும். இந்த விஜயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும், இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் பலப்படுத்த இது நீண்ட தூரம் செல்லும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.