துருக்கி தூதரகத்தில் இருந்து வந்த எச்சரிக்கை கடிதத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அனுப்பாமல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியமை தொடர்பில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க விளக்கமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வழங்கப்பட்ட சாட்சியம் தொடர்பிலேயே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இலங்கையில், துருக்கி FETO தீவிரவாதிகளின் பிரசன்னம் இருப்பதாக துருக்கியின் தூதுவர் அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த கடிதம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்படாமல் ஏன் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டது என்று ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வி எழுப்பியிருந்தது.
பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே ஆணைக்குழு இந்த கேள்வியை எழுப்பியிருந்தது.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஆரியசிங்க, துருக்கி தூதரகத்தில் இருந்து தமது அமைச்சின் மேற்கு பிரிவுக்கு வந்த கடிதம் ராஜதந்திர கடிதம் என்ற வகையில் அது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டதாக ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.