மதுரவாயலில் இளைஞர் ஒருவர் தனது நான்கு வயதுப் பெண் குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்ததில் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல், பொன்னியம்மன் மேடு, பொன்னுசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). இவரது மனைவி டோனலெட்டி சுனிதா(26). இவர்களுக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 4 வயதில் ஹரிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளனர். அவர் பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு பூண்டு குடோனில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பதிக்கு மன அழுத்த நோய் இருந்து வந்துள்ளது. அதற்காக கடந்த இரு வருடங்களாக மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருப்பதி வீட்டில் இருந்துள்ளார். மதியம் சுமார் 2 மணியளவில் திருப்பதிக்கு திடீரென அதிக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மனைவி வீட்டு பணிகளில் இருந்துள்ளார். திடீரென திருப்பதி தனது 4 வயது மகள் ஹரிகாவுடன் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். மொட்டை மாடிக்குச் சென்றவர் திடீரென மகளுடன் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை ஹரிகா உயிரிழந்தார். திருப்பதி ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்தார்.
தந்தையும் மகளும் மாடியிலிருந்து குதித்ததைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவரும் உயிரிழந்தார். கணவரையும் மகளையும் பறிகொடுத்த மனைவி கதறினார். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார் இருவர் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.