“மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டைக் கொடுத்த ரணில் தலைமையிலான அணியையும் மற்றும் இந்த அணியின் பங்காளியாகச் செயற்பட்ட சம்பந்தன் தலைமையிலான அணியையும் அரசு தூக்கிலிட வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து இந்த நாட்டை சர்வதேசத்திடம் அடகு வைத்துவிட்டார்கள்.
இந்த வரலாற்றுத் துரோகத்தை இழைத்த ரணில் – சம்பந்தன் அணிகளை சும்மாவிடக்கூடாது. அவர்களுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும். அந்தத் தண்டனை தூக்குத் தண்டனையாகவே இருக்க வேண்டும்.
இது பௌத்த – சிங்கள நாடு. ராஜபக்சக்கள் தலைமையிலான அரசே இந்த நாட்டை ஆட்சி செய்கின்றது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையோ அல்லது வெளிநாடுகளே அல்லது சர்வதேச அமைப்புக்களோ இலங்கை விவகாரம் தொடர்பில் ராஜபக்ச அரசுடன் பேசித்தான் எதையும் செய்ய முடியும்.
ராஜபக்ச அரசு செய்ய முடியாது என்று கூறுவதை சர்வதேசம் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது.
ரணில் அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களிலிருந்து ராஜபக்ச அரசு விலகினால் அந்தத் தீர்மானங்களை ஐ.நா. உடனடியாகவே மீளப் பெற வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.