அரசின் தான்தோன்றித்தனமான முடிவால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை பேராபத்தைச் சந்திக்கவுள்ளது. இதற்கு ராஜபக்ச குடும்பமே முழுப் பொறுப்பு.
இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசணையிலிருந்து விலகினால் அதற்கு எதிராக உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் விமர்சனங்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று ராஜபக்ச அரசு எண்ணுகின்றது.
ஆனால், ஐ.நா. தீர்மானங்களிலிருந்து இந்த அரசு விலகும் முடிவு நாட்டுக்கு சர்வதேச அரங்கில் பேராபத்தையே கொண்டுவரவுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் போர் நிறைவடைந்து 5 நாட்களுக்குள் நாட்டின் உள்ளகப் பிரச்சினையை மஹிந்த ராஜபக்சவே சர்வதேசத்திடம் கொண்டு சென்றார். இதனைத் தேசச் துரோகச் செயற்பாடாகவே கருத வேண்டும்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ – மூனுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் செய்துகொண்ட கூட்டறிக்கையின் பிரகாரமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை மீது 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானங்கள் மிகவும் கனதியாக இருந்தன. ஆனால், 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசு வந்த பின்னர் 30/01 தீர்மானமும் அதற்குப் பின்னர் 40/01 தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியமையாலேயே அவற்றின் கனதி குறைந்தது. அதேவேளை, மின்சாரக் கதிரையிலிருந்து ராஜபக்ச குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டனர்.
எனவே, நல்லாட்சி அரசை தேசத்துரோகிகள் என்று ராஜபக்ச அணியினர் விமர்சிக்கவே முடியாது.
உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்சவும், ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி நாட்டுக்குப் பேராபத்தை ஏற்படுத்தவுள்ள கோட்டைப்பய ராஜபக்சவுமே தேசத்துரோகிகள்” – என்றார்.