அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த குரூப் சுற்று போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா.
10 அணிகள் பங்கேற்கும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை தொடர் கடந்த 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் தொடங்கியது. அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணியுடன் ‘ஏ’ குரூப்பில் இந்தியா இடம்பிடித்தது.
குரூப் சுற்றில் அவுஸ்திரேலியாவுடன் மோதிய முதல் போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா, 2வது குரூப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று மெல்போர்னில் நடந்து குரூப் சுற்று போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஷபாலி வேர்மா அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் எடுத்தார்.
134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கடைசி 1 பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
https://twitter.com/T20WorldCup/status/1232922317635891200
கடைசி பந்தில் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி ரன்-அவுட்டில் ஒரு விக்கெட்டையும் இழந்தது. 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.
குரூப் சுற்றில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி, டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது. அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற முதல் அணி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.