உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாய் குறைந்தபட்ச கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது காணப்படும் 60 ரூபாய் குறைந்தபட்ச கட்டுப்பாட்டு விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனூடாக பெரிய வெங்காய விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.
விவசாயிகளுக்கு தமது அறுவடைகளுக்கான நியாயமான விலையினை பெற்றுக் கொடுத்து பயிர்ச்செய்கைக்காக அவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் விசேட வேலைத்திட்டமாக இதனை செயற்படுத்த அமைச்சரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.