தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவமே தோற்கடித்தது என்பது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவால் கூறப்பட்ட முதல் பொய்யாகும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பா.சு.நிஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பாதுகாப்பு அமைச்சில் கடந்த 25ஆம் திகதி சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிகாஸ்வேயை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன சந்தித்தித்தார்.
இதன்போது அவர், சிகாஸ்வேயிடம் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்களைக் கூறி அவர் மீது நன்கு மிளகாய் அரைத்து அனுப்பியிருக்கின்றமை புலனாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவமே தோற்கடித்தது என்பது அவரால் கூறப்பட்ட முதல் பொய்யாகும். தமிழருடைய சித்தாத்தங்கள் என்றால் என்னவென்றே தெரிந்திராத கமல் குணரத்ன, எம் அரசியல்வாதிகள் மீண்டும் தமிழ் மக்களின் மனதில் விடுதலைப் புலிகள் பற்றிய சித்தாத்தங்களை பரப்புகின்றார்கள் என்று கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை என்றும் தமிழ் அரசியல் வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை விரும்புகின்றார்கள் என்றும் அடுக்கடுக்கான பல பொய்யான தகவல்களைக் கூறி தமிழ் மக்களினது ஒட்டுமொத்த அபிலாசைகளையும் மொத்தமாக மூடி மறைத்துள்ளார்.
எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல அப்பாவித் தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் ஈவிரக்கமின்றி யுத்த விதிமுறைகளை மீறி கொத்துக்குண்டுகளாலும், இராசாயனக் குண்டுகளாலும், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் பல சித்திரைவதைகளையும், பல துஷ்பிரயோகங்களையும் செய்தவர்கள் இப்பொழுது நல்லவர்களாக மாறி சித்தாந்தம் பற்றிப் பேசுகின்றனர்.
தமிழ் மக்களின் சித்தாந்தங்கள் குறித்துப் பேச எவ்வித அருகதையும் இல்லை என்பதை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் அழித்தது என்று கூறுவதை விட இலங்கை இராணுவம் பல நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் தான் விடுதலைப் புலிகளை அழிக்கக் கூடியவாறு இருந்தது என்ற உண்மையை கமால் குணரத்ன சிகாஸ்வேயிடம் கூறியிருக்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மனதில் விடுதலைப் புலிகள் பற்றிய சித்தாத்தங்களைப் பரப்ப வேண்டிய தேவை இல்லை. காரணம் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் சித்தாந்தங்கள் ஊடாகத்தான் உருவாகியவர்கள் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி தமிழ் மக்கள் வேறு, விடுதலைப் புலிகள் வேறல்ல. இரண்டும் ஒன்று என்பதே உண்மையான சித்தாந்தம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் அரசியல், பொருளாதார, கல்வி, பண்பாட்டு ரீதியாக எந்த விதத்திலும் மக்கள் பாதிக்கப்படவில்லை. மாறாக நல்லதொரு நிலையிலேயே வாழ்ந்தார்கள். தமிழ் மக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தனி நாட்டையே விரும்புகிறார்கள் என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.
தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றும் அவர்களது குடும்பங்களில் முடிவு எடுத்து வந்து உங்களிடம் அதிகாரப் பகிர்வு தாருங்கள் என்று கேட்கவில்லை. மாறாக ஈழத்திலும், புலத்திலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எண்ணங்கள், பிரதிபலிப்புக்களையே எமது மக்கள் பிரதிநிதிகளுடாக தெரியப்படுத்தியதால்தான் அவர்கள் எம்மக்களுக்கு அதிகாரப்பகிர்வைத் தாருங்கள் எனக் கேட்கின்றார்கள்.
ஆகவே கமல் குணரத்ன வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகளை கூறும் போது உண்மைகளை மாத்திரம் கூற வேண்டுமே தவிர பொய்களையல்ல.
மேலும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக பொய்யான தகவலைக் கூறிய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.