இந்தியாவை உலுக்கிய நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்படவிருந்த நிலையில், திடீரென்று மறு உத்தரவு வரும் தள்ளி வைக்கப்படுவதாக டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் திகதி இரவு மருத்துவ மாணவி நிர்பயா ஆறு பேர் கொண்ட கும்பலால் பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
அதன் பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்த போதும், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இது தொடர்பாக கைதான 6 பேரில் ராம் சிங் திஹார் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவன் சிறுவன் என்பதால், மூன்று ஆண்டு சீர்திருத்த பள்ளி வாசத்துக்கு பிறகு விடுதலையாகி விட்டார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரும் மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போனது.
குற்றவாளிகள் நால்வரில் முகேஷ் குமார் சிங், அக்ஷய் குமார், வினய் குமார் சர்மா ஆகிய மூவரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
தங்கள் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 5-ஆம் திகதி தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீடு மனு மீது மார்ச் 5-ஆம் திகதி விசாரணை நடைபெற உள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் இன்று தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் கடந்த 17-ஆம் திகதி உத்தரவிட்டது.
பவன் குமார் குப்தா, அக்ஷய் குமார் சிங் ஆகியோர் சார்பில் மரண தண்டனை வாரண்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்று தள்ளுபடி செய்தார்.
இதனிடையே, பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த நிலையில், அவரது சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டுள்ளதால், மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என பவன் குமாரின் வழக்கறிஞர் ஏ பி சிங் கூடுதல் அமர்வு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடிய போது, நீதிபதி பவன் குப்தா வழக்கறிஞரிடம், நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். ஜாக்கிரதை. யாராவது ஒருவரின் தவறான நடவடிக்கையால் ஏற்படும் விபரீத விளைவுகளை யோசித்து பாருங்கள் என்று எச்சரித்தார்.
கருணை மனு அரசிடம் உள்ளதால் நீதிமன்றத்தின் பணி முடிந்து விட்டது என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராணா, தூக்கு தண்டனை நிறைவேற்றம் மறு உத்தரவு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக நேற்று மாலை அறிவித்தார்.
குற்றவாளிகள் அளிக்கப்பட்ட சட்டப்பூர்வ வாய்ப்புகளை அவர்கள் முழுவதும் நிறைவேற்ற வாய்ப்பு கொடுக்கும் வகையில் தண்டனை தள்ளி வைக்கப்படுகிறது.
நிர்பயாவின் தாயாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தண்டனையை தள்ளி வைக்கிறேன். கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை தண்டனை தள்ளி வைக்கப்படுகிறது.
எனவே, இன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட உள்ள மரண தண்டனை மறு உத்தரவு வரும் தள்ளி வைக்கப்படுகிறது என தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதனால் நிர்பயா குற்றவாளிக்கு 3-ஆம் முறையாக தூக்குதண்டனை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.