அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்படவிருந்த மில்லேனியம் சவால் என்கிற எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஒருபோதும் கைச்சாத்திடாது என்பதை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல திட்டவட்டமாக இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
நாட்டின் இறையான்மையை பாதிக்கின்ற எந்தவொரு ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்பதையும் அவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்காவுடனான எம்.சி.சி என்ற மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமும் கைச்சாத்திடப்போவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போதில்லை என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் கடந்த வாரத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, இந்த எம்.சி.சி ஒப்பந்தம் இலங்கையின் இறைமையை பாதிப்பதால் அதில் கைச்சாத்திடாமலிருக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதாகக் கூறினார்.
“எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம் என்பதை வாய்களைத் திறந்தே கூறிவிட்டோம். நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் விடயங்கள், நாட்டின் இறைமையை பாதிக்கின்ற ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்திருக்கின்றோம். எம்.சி.சி ஒப்பந்தத்தில் நாங்கள் கைச்சாத்து இடமாட்டோம்” என்றார்.
இதேவேளை இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, எவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிற நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையை புதிய அரசாங்கம் கடைபிடிக்காது என்று குறிப்பிட்டார்.
“கடந்த நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய புதிய அரசாங்கத்தின் வித்தியாசத்தை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் முதற் பணியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் யாராவது ஒரு ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைப்பதாகும்.
அதற்காகவே புறம்பான எவ்.சி.ஐ.டி என்கிற பிரிவை உருவாக்கினார்கள். அந்த விசாரணைப் பிரிவு சட்டவிரோம் என்று தெரிவித்து நீதிமன்றத்தை நாடினோம். அதற்கான வழக்கின் தீர்ப்பும் இதுவரை வரவில்லை, ஆனால் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
அதில் அநுரகுமார உள்ளிட்டவர்கள் இருக்கின்றார்கள். அவசர நீதிமன்றங்களையும் அமைத்தார்கள். நாங்கள் பழிவாங்கலை அடிப்படையாகக் கொன்று இன்று விசாரணைகளை நடத்தவில்லை.
இந்த நாட்டில் மோசடியாளர்கள் அற்ற அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே தேர்தல் வாக்குறுதியாகும். அதற்கு இந்த நாட்டில் நிறுவனங்கள் இருக்கின்றன.
நீதிமன்றம், சட்டமா அதிபர், சட்டங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இன்னாரை கைது செய்து சிறை தள்ள வேண்டும் என்கிற கொள்கை எங்களிடத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.