கடந்த காலத்தில் தமிழ் மக்கள் வாக்குகளைப்பெற்று ஏமாற்றிவிட்டு அந்த வாக்கினைக்கொண்டு தங்களின் வியாபார முதலீடாக கொண்டு தாராளமாக உழைத்துக்கொண்டவர்கள் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்க ஆனந்த சங்கரி ஐயாவின் சூரியன் சின்னத்தினை வாடகைக்கு எடுத்து தமிழ் மக்களை ஏமாற்றமுனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடகிழக்கில் இன்று பல்வேறு கட்சிகள் சூழ்ச்சிகள் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினையோ, தமிழ் மக்களையோ காட்டிக்கொடுத்து சலுகைகளையும், பதவிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் பெற்றுக்கொள்ளவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்றுடன் நான்கரை வருடத்தினை பூர்த்திசெய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தினை கலைக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
19வது திருத்த சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி நாடாளுமன்றத்தினை கலைக்கவுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மக்களை குடைந்தெடுப்பதற்காக பல்வேறு கருத்துகளுடன் அரசியல்வாதிகள் வருவார்கள். அண்மையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அமைச்சர் தெளிவாக ஒரு விடயத்தினை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட 30/1,34/1,40/1 பிரேரணைகளில் இருந்து வாபஸ்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற அழிவுகள், படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல்,மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக சொல்லப்பட்டுள்ளன.
இந்த விடயங்களில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகின்றது என்ற அர்த்தம் இதன்மூலம் கொள்ளப்படுகின்றது. உள்ளகபொறிமுறை மூலம் இவற்றினை செய்யமுடியும் என இலங்கை சொல்லமுடியும்.
ஆனால் உள்ளக பொறிமுறையென்பது வெற்றியளிக்காத ஏமாற்றுவித்தை. கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு செயற்பாடுகள் மூலம் நாங்கள் விளங்கியுள்ளோம்.
இந்த நிலையில் ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் இருந்து விலகியதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தமுடியாது, மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றத்தினை அடையமுடியாது, பொறுப்புக்கூறமுடியாது என்பதன் அர்த்ததினையே நாங்கள் புரிந்துகொள்ளமுடிகின்றது.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் உள்ளக விசாரணையென்பது சிறிதளவும் வெற்றியளிக்கவில்லை. ஆகவே ஏமாற்று நாடகம் ஒன்றினை தற்போது அரங்கேறவுள்ளது என்பதே வெளிப்படையாக தெரிந்த உண்மையாகவுள்ளது.
சர்வதேச ரீதியாக செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கையினை அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள் என்றால் இனிவரும் இலங்கை அரசின் ஏமாற்றுவித்தைகள் சர்வதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழர்களின் மனித உரிமைகள் விடயத்தில் இது ஒரு திருப்பத்தினை ஏற்படுத்தியிருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு நம்பிக்கை வழங்கப்பட்டிருந்தது.
வடகிழக்கில் இந்த நூறு நாள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சோதனையான வேதனையான நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந்தவேதனையான சோதனையான நிகழ்வுகளை சாதனைகளாக கூறித்திரியும் ஒரு அரசியல்வாதி தொடர்பில் நான் கவலைப்படுகின்றேன்.