மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி ஒருவர், வீதிகளில் சுதந்திரமாக நடந்துகொண்டு வெளியிட்ட வீடியோவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆள்நடமாட்டமில்லாத சீனாவின் வுஹான் வீதிகளில் சுற்றித்திருந்த ஒரு நபர், “முட்டாள்களே அதிகாரிகள் உங்களை வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளனர். நீங்கள் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்கள். வெளியே வந்து விருப்பப்படி உலாவுங்கள்” என பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவானாது இணையத்தில் வைரலானதை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அதில் வீடியோ வெளியிட்ட அந்த நபர் வுச்சாங் மாவட்டத்தை சேர்ந்த 56 வயதான லி ஜுன் என்பது தெரியவந்தது. அவர் கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்ததால் பிப்ரவரி 16 அன்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
மருத்துவர்கள் தங்களது வேலைகளில் தீவிரமாக இருந்ததை பயன்படுத்திக்கொண்ட லி ஜுன், அங்கிருந்து தப்பி சுதந்திரமாக தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது, தனக்கு தேவையானவற்றை குடும்பத்தினர் வாங்கிக்கொடுக்காத ஆத்திரத்திலே வீடியோ வெளியிட்டதாக கூறியுள்ளார். பிப்ரவரி 22ம் திகதி அன்று அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு சிகிச்சையும் பராமரிப்பும் வழங்கிய அரசாங்கத்தையும் மருத்துவர்களையும் ஏமாற்றியதற்கு நான் வருந்துகிறேன். வுஹானின் நற்பெயரை கெடுத்துவிட்டேன்.
என் நடத்தைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் சிகிச்சைக்கு தீவிரமாக ஒத்துழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் குணமடைந்தவுடன் கடுமையான சட்ட தண்டனையைப் பெற தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளர்.