சிரியாவில் ரஷ்யாவும், துருக்கியும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய அரசாங்கத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, ஜூலை 22 ம் தேதி மராட் அல்-நுமன் நகரில் நடத்திய தாக்குதலில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறைந்தது இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் ஹ்மிமிம் விமானநிலையத்தை விட்டு வெளியேறி அந்தப் பகுதியை சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 25 கடைகள் அழிக்கப்பட்டன.
வாரங்கள் கழித்து, இடம்பெயர்ந்தோருக்கான ஹாஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 40 பேர் காயமடைந்தனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
“இரண்டு சம்பவங்களிலும், ரஷ்ய விமானப்படை ஒரு குறிப்பிட்ட இராணுவ நோக்கத்தில் தாக்குதல்களை இயக்கவில்லை, இது பொதுமக்கள் பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவதற்கான போர்க்குற்றத்திற்கு சமம்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அதேபோல குர்திஷ் வசம் உள்ள பகுதிகள் மீதான தாக்குதலின் போது துருக்கியுடன் இணைந்த கிளர்ச்சியாளர்கள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் விவரித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் துருக்கிய இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டால், அந்த தளபதிகள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாளிகளாக இருக்கலாம் என்று ஆணைக்குழுவின் தலைவரான பாலோ பின்ஹிரோ கூறியுள்ளார்.
சமீபத்திய குற்றங்களுடன் தொடர்புடைய பெயர்களை அதன் ரகசிய பட்டியலில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதாகாவும் கூறியுள்ளார்.
சிரியாவின் ஒன்பது ஆண்டுகால யுத்தத்தின் போது செய்யப்பட்ட குற்றங்கள் குறித்த தகவல்களுக்கு உலகளவில் நீதித்துறை அதிகாரிகளிடமிருந்து 200 கோரிக்கைகள் வந்துள்ளன என்று அவர் ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையானது 2019 ஜூலை முதல் 2020 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.