கடந்த அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடக்கப் போவது குறித்து அறிந்திருந்தும் எதனையும் செய்யவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக கத்தோலிக்க திருச் சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயர் மட்ட நாற்காலியில் இருந்து அந்த நபர், தாக்குதல் பற்றி அறிந்தும் நித்திரையில் இருந்திருந்தால், அவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனை கடுமையாக எதிர்க்கின்றேன். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் போதுமானதல்ல எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே அரச உயர் மட்ட தலைவர் என்று மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறைமுக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.