ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகல் – பொத்துஹெர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இதன் காரணமாக எமது பொறுமை எல்லை மீறியுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூறியிருந்தால், கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாம் தரத்திற்கு தள்ளி தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். கீழ் மட்டத்தில் இருக்கும் சிறிய அரசியல்வாதிகளே சுதந்திரக் கட்சியை திட்டி வருகின்றனர்.
சுதந்திரக் கட்சியினர் இல்லை என்றால், பொதுஜன பெரமுன என்ற ஒன்று இருந்திருக்காது. முடிந்தளவு பொறுமை காத்து இதனை கூறுகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைவரும் இணைந்து வெற்றியை பெற்றுக்கொண்டோம். இதனை இன்று மறந்துள்ளனர். இதனைதான் நன்றி மறப்பது என்று கூறுவார்கள்.
பொதுஜன பெரமுனவின் இந்த தாக்குதலுக்கு மத்தியில் அமைதியாக இருப்பதால அல்லது எதிராக மாற்று சக்தியை அமைப்பதா என்பது தொடர்பில் நல்ல புரிதலோடு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.