ஹவாயில் இருந்து அமெரிக்கா வந்த கப்பலில் பயணித்த 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் பயணிகள் அனைவரும் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
சீனாவில் தோன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 97 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நாடுகளில் இதுவரை 1,02,180 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, 3,484 பேர் பலியாகி இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக சீனாவில் 80,711 பேர் இந்த வைரசால் தாக்கப்பட்டு உள்ளனர். வைரசின் பிறப்பிடமான இங்கு மேலும் 28 பேர் பலியானதன் மூலம், இந்த வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,070 ஆக உயர்ந்து விட்டது.
இப்படி அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறது.
நாட்டின் ஏற்றுமதி 17.2 சதவீதமும், இறக்குமதி 4 சதவீதமும் குறைந்து நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இது அமெரிக்காவுடன் வர்த்தகப்போர் நடந்த கடந்த 2019 பெப்ரவரிக்குப்பின் மிகப்பெரும் வீழ்ச்சியாகும்.
சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 49 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மொத்த பலி 197ஐ எட்டியுள்ளது. இதுவரை 3,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சிவில் பாதுகாப்புத்துறை தலைவர் ஏஞ்சலோ பொரல்லி தெரிவித்தார்.
இதைப்போல ஈரானிலும் பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 21 பேர் இந்த வைரசுக்கு இரையாகி இருப்பதை தொடர்ந்து மொத்த சாவு 145 ஆக உயர்ந்து விட்டது. வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 5,823 ஆகி விட்டது.
ஈரானின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான பதேமே ரபார் (55) கொரோனா வைரஸ் தாக்கி நேற்று உயிரிழந்தார்.
இவரையும் சேர்த்து வைரஸ் தாக்குதலுக்கு பலியான எம்.பி.க்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஆதரவை ஈரான் நாடியுள்ளது.
இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஷெரிப் கூறுகையில், ‘கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கு இந்த பிராந்தியமும், ஒட்டுமொத்த உலக நாடுகளும் தோள் கொடுத்தால் மட்டுமே ஈரானால் இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.
நாம் இணைந்து வெற்றி பெறுவோம் அல்லது இணைந்து தோல்வியடைவோம்’ என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 330 ஆகவும், சாவு எண்ணிக்கை 17 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லெபனானில் 4 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருக்கிறது.
பாலஸ்தீனத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு ஒரு மாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
குவைத்தில் 61 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.