வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்துவிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மாலை கூடிய கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுவதற்காக கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் விதுலா சிறிபத்மநாதன், எஸ்.விமலேஸ்வரி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.
எனினும் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு அவர்களது விண்ணப்பங்களை நிராகரித்து மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் ஆகியோரைக் களமிறக்கத் தீர்மானித்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வையடுத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாகக் கூடிய கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒரு பகுதியினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதை கடுமையாக எதிர்த்தனர்.