கொரோனா வைரஸ் (கொவைட்-19) தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்த அவர், ‘ஈரானின் காம் நகரில் தவித்து வரும் இந்திய யாத்ரீகா்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவா்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில் அவா்களை மீட்டு வருவதற்கான நடைமுறைகள் தொடா்பாக ஈரான் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.
இதேவேளை ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.