உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய கணக்கின்படி அந்நாட்டில் நேற்று 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் மரணித்துள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் ஈரானிலும் 194 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பாதிப்பு வேகமாகத் அதிகரித்துவருகிறது. கடற்கரை மாகாணமான ஒரேகான் உள்ளிட்ட 8 மாகாணங்களில் சுகாதார அவசர நிலையை அந்தந்த மாகாண ஆளுநர்கள் பிறப்பித்துள்ளனர். அண்டாரியோ மற்றும் அல்பெர்ட்டா பகுதிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கனெக்டிகட் மற்றும் மெம்பஸ் பகுதியில் புதிதாக நோயின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தங்கள் நாட்டு இராணுவத்தினரோ அவர்களின் குடும்பத்தினரோ இத்தாலி மற்றும் தென்கொரியாவுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவில் மட்டும் 22 பேர் உயிரிழந்த நிலையில் 538 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொரோனா பாதிப்பால் எகிப்தில் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நோயின் தீவிரத் தாக்கத்தின் எதிரொலியாக நோர்வேயுடனான இராணுவ ஒத்திகையை பின்லாந்து இரத்துச் செய்துள்ளது. இதேபோல் போலந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.