பொதுத்தேர்தலில் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட சஜித் தலைமையிலான அணி முன் வருவதுடன் ராஜபக்சக்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியானது யானைச் சின்னத்தின் கீழ்தான் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. இம்முறையும் அதே சின்னத்தின் கீழ் களமிறங்குவதற்கு கட்சியின் மையச் செயற்குழு தீர்மானித்தது.
கட்சிக்குள் இப்படியான பிரச்சினை வருமென நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டு அனைவரும் ஓரணியாகப் பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
முறையாக பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரமுடியுமென்றால் நாம் ஒன்றாகப் பொதுத்தேர்தலில் போட்டியிடலாம். கட்சி பிளவுபடுவதை நாமும் விரும்பவில்லை.
சஜித் பிரேமதாஸ என்பவர் சிறந்த இளம் தலைவராவார். அவரின் தந்தையும் கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்தவர். நாட்டுக்காகப் பல சேவைகளைச் செய்துள்ளார். அந்த அணியில் இப்படியான பலர் இருக்கின்றனர். எனவே, அவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியானது ராஜபக்சக்களுக்கே சாதகமாக அமைந்துவிடும். எனவே, நாம் அனைவரும் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும். கடந்த காலங்களிலும் அந்த சின்னத்தில்தான் களமிறங்கினோம்.
சஜித் பிரேமதாசவுக்கோ, அவருடன் இருப்பவர்களுக்கோ ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் கதவடைப்பு செய்யவில்லை. பேச்சுகள் தொடர்கின்றன. எனவே, வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு முன்னர் ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புகின்றேன்.
அதேவேளை, ராஜபக்சக்களுடன் எமக்கு அரசியல் டீல் கிடையாது. அன்றும் இன்றும் அவர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றோம். இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் பிளவுபடுத்துவதுதான் ராஜபக்சக்களின் அரசியல் விளையாட்டு.
எனவே, எமது அணியிலுள்ள உறுப்பினர்களே சேறுபூசிக்கொண்டால் எப்படி இணைவு சாத்தியமாகும்? எனவே, ராஜபக்சக்களின் இந்தச் சூழ்ச்சிக்குள் எவரும் சிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.