முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை பொலிஸார் தேடிக்கொண்டிருக்கின்ற போது அரசாங்கம் அவரை மறைத்து வைத்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமக்கு கிடைத்த தகவல்களின்படி ரவி கருணாநாயக்க அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்துள்ளார்.
அரசாங்கம் பொதுவாக சில சந்தேகநபர்களை கைது செய்ய அனுமதிப்பதில்லை.
மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனை விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கைது செய்யப்பட வேண்டும்.
எனினும் அவரின் பெயர் இன்றும் சந்தேகநபர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ரவி கருணாநாயக்க அரசாங்கத்தின் அரசியல்வாதியொருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தெரிவித்த போதும் அந்த அரசியல்வாதியின் பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.