கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்hக இத்தாலி அறிவித்தள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறைக்கைதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்களை பார்வையிடுபவர்களிற்கு அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தொடர்ந்தே சிறைச்சாலைகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
மொடெனா என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மெத்தைகளிற்கு தீ மூட்டியதுடன்,சிறைச்சாலையின் மருந்தகத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
மிலானில் உள்ள சான்விட்டரோ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நிற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தங்களிற்கு மன்னிப்பை வழங்குமாறு கோரியுள்ளனர்.
சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்ற உத்தரவிற்கு எதிராக ரோமில் சிறைக்கைதிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலியின் வேறு சிறைகளில் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாலியின் பல சிறைச்சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சில சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர்கள் நெரிசல் மிகுந்த சூழலில் தாங்கள் உள்ளதால் தங்களிற்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சிறைக்கைதிகள் அச்சப்படுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைகளில் பொதுவாகவே பதட்டம் அதிகம்,தாங்கள் தொற்றுநோய் வேகமாக பரவக்கூடிய இடத்தில் உள்ளமை கைதிகளிறகு தெரியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.