உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அதற்கமைய இந்த வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.
சர்வதேசத்தின் பல நாடுகளை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 800க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு ஏனைய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அவசர தேவையன்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக இத்தாலி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.