வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக நூறுக்கும் மேற்பட்ட பொதுக்கள் ஒன்றிணைந்தனர்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் கோரோனா பரிசோதனை வேண்டாம், அரசே சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்தை தெரிவு செய், மட்டு வைத்தியசாலை பொது மக்களுக்கானது, தனியான தனிமைப்படுத்தும் வைத்தியசாலையை ஏற்பாடு செய், நீங்கள் எங்களை வேறுபடுத்துகின்றீர்களா, கொரோனாவை எமக்கு திணிக்க வேண்டாம் உள்ளிட்ட பவ்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலையின் நுழைவாயிலை வந்தடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டு காந்தி பூங்காவிற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், ஜெயானந்தமூர்த்தி, மட்டு மாநகர முதல்வர் உட்பட அரசியல் வாதிகள் வந்தடைந்தபோதும் ஆர்ப்பாடத்திற்கு பொது மக்கள் வராததையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

