வேலியே பயிரை மேய்ந்த கதையாக நித்யானந்தா வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண் கடத்தல் உள்ளிட வழக்குகள் நித்யானந்தா மீது இருப்பதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நித்யானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும் தனது சிஷ்யைகளுடன் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கில் குழந்தைகள் நல கமிட்டி, காவல்துறை என பல துறைகளும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி உள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்திலும், குழந்தைகள் நல அமைப்பினரிடமும் புகார் செய்யப்பட்டது. ஆனால், ஆசிரமத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர், குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி ஆபாச சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நித்யானந்தாவுக்கு சாதகமான அறிக்கைகளை பெறும் வகையில் அவர்கள், குழந்தைகளை பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். எனவே விசாரணை அதிகாரிகள் மீதும், நித்தியானந்தா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணா, டி.எஸ்.பி.க்கள் கமரியா, ரியால் சர்வையா, சர்தா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா மீதும் கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.