கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால் நிலைமையை சமாளிக்கும் வகையில் சுமார் ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க கூடிய இயலுமை உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட கூடிய நிலைமை மற்றும் அவசரகால நிலைமை பிறப்பிக்கப்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அமைச்சர்கள், செயலாளர்கள், தொழிற்சங்க பிரதநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் பரவலால் ஆடை தொழிற்துறைக்கு சுமார் 500 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அவசர நிலைமைகளின் போது முக கவசங்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.