சீன பிரஜைகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிகக் குறைவாகவே உள்ளதால் அவர்களுக்கான பயணத்தடை விதிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
எனினும் தற்போதுள்ள அச்சுறுத்தலுக்கு அமைய இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளையே தடைசெய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.
நாங்கள் எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுக்கும் போதும் விஞ்ஞான ரீதியிலான பின்னணியை அடிப்படையாக கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றோம்.
கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்கள் ஆரம்பத்திலேயே முன்னெடுத்துள்ள நாடாக அடையாளபடுத்தப்பட்டுள்ளோம்.
இதன்படி நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எங்கிருந்து இந்த வைரஸ் அதிகமாக பரவும் அபாயம் இருக்கின்றது என்பதனை ஆராய்ந்த போது சீனாவே இந்த வைரஸின் ஆரம்ப இடமாக இருந்தாலும் தற்போது அங்கு அந்த தொற்று பரவல் தன்மை மிகக் குறைவடைந்துள்ளது.
சீனாவின் சனத்தொகை வீதத்துடன் பார்க்கும்போது சீனாவில் கொரோனா வைரஸ் மூலமாக பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையை காண முடிகின்றது.
சீனாவில் நேற்று 20 பேர் வரையிலானோரே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்படி சீனாவில் இருந்து இந்த வைரஸ் பரவும் தன்மை குறைவாகவே இருக்கின்றது. அவர் வெற்றிகரமாக இதனை முறியடித்து வருகின்றனர் என்பது உறுதியாக கூறமுடியும்.
அதேபோல் சீன பிரஜை ஒருவர் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் தன்மை மிகக் குறைவாக காணப்படுவதன் காரணமாக சீனர்கள் இங்கு வருவது குறித்த தடை விதிக்கப்படவில்லை.
எனினும் முறையான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.